
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று (டிசம்பர் 15) முதல் தொடங்கியது. அதன்படி நவி மும்பையில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் உமா சேத்ரி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் உமா சேத்ரி 24 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.அதன்பின் மந்தனாவுடன் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸும் அதிரடியாக விளையாடிய நிலையில் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதில் அபாரமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 54 ரன்களை எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷும் 20 ரன்களுடன் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அத்துடன் நிற்காத அவர் இறுதிவரை களத்தில் இருந்து 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 73 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.