ஐபிஎல் 2023: பேர்ஸ்டோவுக்கு மாற்றாக பிபிஎல் தொடர் நாயகனை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 16ஆவது சீசனிலிருந்து விலகிய ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்றாக ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட்டை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது. இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றிராத அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கி ஏமாற்றத்துடன் தொடரைவிட்டு வெளியேறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த சீசனிலாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, ஷிகர் தவான் கேப்டன்சியில் உள்நாட்டு மற்றும் இங்கிலாந்து வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைத்தது.
டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல காரணமாக இருந்து தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கரனை உச்சபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. இங்கிலாந்து அதிரடி வீரர்கள் லியாம் லிவிங்ஸ்டோன்(ரூ.11.50 கோடி) மற்றும் ஜானி பேர்ஸ்டோ(ரூ.6.75 கோடி) ஆகியோரையும் அணியில் எடுத்திருந்தது.
Trending
ஷிகர் தவானுடன் இங்கிலாந்து அதிரடி வீரரான ஜானி பேர்ஸ்டோவை ஓபனிங்கில் இறக்கி அதிரடியான தொடக்கத்தை பெற்று, அதன்பின்னர் லிவின்ஸ்டோன், ராஜபக்சா, ஷாருக்கான் என அதிரடியான பேட்டிங் ஆர்டரை கட்டமைத்த மகிழ்ச்சியில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவு.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜானி பேர்ஸ்டோவ், ஓய்வில் இருந்துவந்த நிலையில், கூடிய விரைவில் ஓடுமளவிற்கு ஃபிட்னெஸை பெறவுள்ளார். இந்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகியவற்றில் இங்கிலாந்து அணிக்காக ஜானி பேர்ஸ்டோவ் விளையாடுவது அவசியம்.
அதனால் அவரது ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு ஐபிஎல்லில் ஆடுவதற்கு அவருக்கு தடையில்லா சான்று வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது. அதேசமயம் லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன் ஆகியோர் ஐபிஎல்லில் ஆடுவார்கள்.ஆனால் ஜானி பேர்ஸ்டோ ஆடாதது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவுதான்.
இந்நிலையில், ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட்டை ஒப்பந்தம் செய்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. 27 வயதான மேத்யூ ஷார்ட், 2022-2023 பிக்பேஷ் லீக்கில் 144 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 430 ரன்களை குவித்து அசத்தினார். 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார். ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்று வீரராக ஒரு தரமான ஆல்ரவுண்டரைத்தான் ஒப்பந்தம் செய்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்.
Win Big, Make Your Cricket Tales Now