
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது கடந்த ஜனவரி 22தேதி தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வென்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் விளையாடவுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி முதல் போட்டியில் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த அபிஷேக் சர்மா காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.