Advertisement

ஐபிஎல் 2021: ரஸ்ஸல், கம்மின்ஸ் அதிரடி வீண்; கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 22, 2021 • 05:17 AM
IPL 2021: Chennai Survive A Scare As Kolkata Falls Short By 18 Runs
IPL 2021: Chennai Survive A Scare As Kolkata Falls Short By 18 Runs (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன், சென்னை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் - டூ பிளேசிஸ் இணை களமிறங்கியது. கடந்த மூன்று போட்டிகளிலும் திணறிவந்த ருத்ராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் கொல்கத்தாவின் பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்டார்.

Trending


அதற்கு பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ருத்ராஜ், ஸ்கோயர் லெக் திசையில் விளாசிய சிக்சரே சான்று.டூ பிளேசியும் அவருக்கு துணை நிற்க, சென்னை அணி 5.3 ஓவரிலேயே அரைசதம் அடித்து கெத்து காட்டியது.நாகர்கோட்டி வீசிய 11ஆவது ஓவரில் 16 ரன்கள், பிரசித் கிருஷ்ணா வீசிய 12ஆவது ஓவரில் 17 ரன்கள் என்று இருவரும் கொல்கத்தாவை வெளுத்து வாங்கினர்.

ருத்துராஜ் 33 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். அவர் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது, வருண் சக்கரவர்த்தியிடம் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். ருத்ராஜ் 42 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 64 ரன்களைக் குவித்தார்.

ருத்துராஜ் - டூ பிளேசிஸ் இணை 115 ரன்களை எடுத்திருந்தது.அதன்பின், மொயின் அலியும் டூ பிளேசிக்கு துணை நின்று ஆடினார். சற்றுநேரம் அதிரடி காட்டிய மொயின் அலி 2 சிக்சர், 2 பவுண்டரிகள் என 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து நரைன் சுழலில் வீழ்ந்தார்.

ரஸ்ஸல் வீசிய 19ஆவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி மிரட்டினார்.நான்காவதாக களமிறங்கிய கேப்டன் தோனி 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் என 17(8) ரன்கள் எடுத்தபோது மோர்கனின் அசத்தல் கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பாட் கம்மின்ஸ் ஆட்டத்தின் கடைசி ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் இரண்டாம், நான்காம் பந்துகளில் சிக்சர் அடித்தார் டூ பிளேசிஸ். அப்போது 94 ரன்களில் இருந்த அவர், ஒரு சிக்ஸர் அடித்தால் சதம் அடிக்கலாம் என்ற நிலையில், அவரால் அடுத்த பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

கடைசி பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடிக்க, சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 220 ரன்களை குவித்தது.கொல்கத்தா தரப்பில் வருண், நரைன், ரஸ்ஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுப்மன் கில்லும், நிதிஷ் ராணாவும் தொடக்கம் தந்தனர்.

சென்னை தரப்பில் தொடக்க ஓவரை வீசிய தீபக் சஹார் நான்காவது பந்தில் கில்லை வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிப்பாட்டி தான் சந்தித்த இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து அசத்தினார்.

சாம் கரண் வீசிய இரண்டாவது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரிகளை விளாசிய ராணா, மூன்றாவது ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி முதல் மூன்று ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 17 ரன்களை எடுத்து நெருக்கடியில் சிக்கியது.

ராணாவை தொடர்ந்து களமிறங்கிய மோர்கனும் வந்த வேகத்தில் சஹார் பந்துவீச்சில் வெளியேற, சுனில் நரைனும் சஹாரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 5 ஓவர்களில் 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து களமிறங்கிய ரஸ்ஸல் ஆறாவது ஓவரில், இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும், ரஸ்ஸலும் சென்னை அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்தனர்.

குறிப்பாக ரஸ்ஸல் 21 பந்துகளில் அரைசதம் கடந்து சென்னை அணிக்கு அச்சத்தை ஏற்படுத்தினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஆட்டத்தின் 12ஆவது ஓவரில் சாம் கர்ரண் ஓவரில் 54 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன் பிறகு களமிறங்கிய பாட் கம்மின்ஸ், தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிவந்த தினேஷ் கார்த்திக் 15ஆவது ஓவரில் 40 ரன்களில் ஆட்டமிழக்க கொல்கத்தாவின் வெற்றி கேள்விக்குறியானது. மனம் தளராத கம்மின்ஸ், சாம் கர்ரண் வீசிய 16ஆவது ஓவரில் 4 சிக்சர்களையும், ஒரு பவுண்டரியையும் பறக்கவிட்டு அதகளப்படுத்தினார்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கம்மின்ஸ், 23 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். 17 மற்றும் 18ஆவது ஓவர்களிலும் கம்மின்ஸ் சிக்சரும், பவுண்டரியும் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றிபெற வைத்துவிடுவார் என அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

19ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் வருண் சக்கரவர்த்தி ரன் அவுட்டாக, கொல்கத்தா அணியின் கடைசி விக்கெட்டான பிரசித் கிருஷ்ணா களமிறங்கினார்.

ஆனால், ஆட்டத்தின் கடைசி ஓவரின் முதல் பந்தில் பிரசித் கிருஷ்ணா ரன் அவுட்டாக கொல்கத்தா அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று, இத்தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது.

சென்னை அணி தரப்பில் தீபக் சஹார் நான்கு விக்கெட்டுகளும், இங்கிடி மூன்று விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக, டூ ப்ளஸ்ஸிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement