
உலக அளவில் நடைபெறும் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர்களுக்கு முன்னோடியாக கருதப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. 2 நாட்கள் மெகா அளவில் நடந்த இந்த ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்ற போதிலும் இறுதியாக 204 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஸிந்தா உரிமையாளராக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் தாங்கள் விரும்பிய மயங் அகர்வால், அர்ஷிதீப் சிங் ஆகிய 2 வீரர்களை மட்டுமே அந்த அணி தக்கவைத்து ஆச்சரியப்படுத்தியது.
இதன் காரணமாக மற்ற அணிகளை காட்டிலும் 72 கோடிகள் என்ற அதிகபட்ச தொகையுடன் இந்த ஏலத்தை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. குறிப்பாக தங்கள் அணியின் கேப்டன் யார் என்று தீர்மானிக்காத வேளையில் இங்கிலாந்தைச் சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டனை 11.5 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் போட்டிபோட்டு வாங்கியது.