
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூருவில் நடந்துவருகிறது. இதுவரை நடந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலைபோனவர் இந்திய வீரர் இஷான் கிஷன். ரூ.15.25 கோடிக்கு அவரை மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. தீபக் சாஹரை அவர் ஏற்கனவே விளையாடிய சிஎஸ்கே அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயரை கேகேஆர் அணி ரூ.12.25 கோடிக்கு எடுத்தது.
வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில் இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர் இவர்தான். இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் வனிந்து ஹசரங்கா ரூ.10.75 கோடி என்ற 2ஆவது அதிகபட்ச தொகைக்கு விலைபோனார்.
இந்த ஏலத்தில் லியாம் லிவிங்ஸ்டோன் ரூ.11.50 கோடிக்கு விலைபோனது அனைவருக்குமே பெரும் வியப்பாக இருந்தது. கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டோன், இந்த முறை 5 அணிகளால் போட்டி போடப்பட்டு கடைசியில் பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது.