
ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஐபிஎல் 2022ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12, 13ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்க போகிறோம் என்பது குறித்த ஆலோசனையை தொடங்கிவிட்டன.
இந்நிலையில் வீரர்களுக்கே, தாங்கள் எந்த அணிக்கு செல்லப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பு ஏக போகத்திற்கு உள்ளது. இதற்கு உதாரணமாக தான் லக்னோ அணிக்கு செல்ல கே.எல்.ராகுலிடம் ஷர்துல் மற்றும் யுஸ்வேந்திர சஹால் பேசியுள்ளனர். புதிதாக வந்துள்ள லக்னோ அணி கே.எல்.ராகுலை கேப்டனாக ஒப்பந்தம் செய்துள்ளது. இதே போல அகமதாபாத் அணி ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக்கியுள்ளது.
கே.எல்.ராகுலுடன் சேர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்த ஷர்துல் தாக்கூர், எனக்காக லக்னோ அணி ஏதேனும் தொகையை ஒதுக்கியுள்ளதா? எனக்கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ராகுல், உன்னுடைய அடிப்படை தொகையான ரூ.10 லட்சத்திற்கு வருகிறாய் என்றால் எடுத்துக்கொள்கிறோம் எனக்கூறினார். இதனால் அந்த பகுதியே கலகலப்பாக இருக்க, யுவேந்திர சஹால் தனது பங்கிற்கு சேட்டையை தொடங்கினார்.