ஐபிஎல் 2022: டெல்லியை வீழ்த்தி சிஎஸ்கே இமாலய வெற்றி!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணிக்கு டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு தொடக்க ஜோடி 110 ரன்களை குவித்து கொடுத்தனர். 41 ரன்களுக்கு ருதுராஜ் ஆட்டமிழந்தார்.
Trending
3ஆம் வரிசையில் இறங்கிய ஷிவம் துபே அதிரடியாக ஆடி 19 பந்தில் 32ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து, சதத்தை நெருங்கிய டெவான் கான்வே 49 பந்தில் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்து 13 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
அதன்பின்னர் தோனி 8 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்கள் அடித்து நன்றாக முடித்து கொடுத்தார். 20 ஓவரில் 208 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 209 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஸ்ரீகர் பரத் 8 ரன்னிலும், டேவிட் வார்னர் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பந்த் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். ஆனால் 25 ரன்களில் மிட்செல் மார்ஷ் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 21 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பந்த்தும் மொயீன் அலி பந்துவீச்சில் போல்டாகினார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 17.4 ஓவர்களிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் மொயீன் அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now