ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியில் இணையும் வீரர்கள் இவர்கள் தான்..!
ஆகமதாபாத் ஐபிஎல் அணியில் ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், ஷுப்மன் கில் ஆகியோர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் தொடரில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதனால் வீரர்கள் ஏலம் மெகா ஏலமாக அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Trending
ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாத இறுதிக்கு முன்பு ஏலத்தில் பங்கு பெறும் வீரர்களின் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது.
லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பிரபல முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவரும் ஆலோசகராக கெளதம் கம்பீரும் உதவிப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் விஜய் தாஹியாவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், ஷுப்மன் கில் ஆகிய வீரர்களை அகமதாபாத் அணி தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா தேர்வாகியுள்ளதாகவும் தெரிகிறது.
ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 15 கோடி சம்பளமும் ஷுப்மன் கில்லுக்கு ரூ. 7 கோடி சம்பளமும் வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அகமதாபாத் அணி பயிற்சியாளர் குழுவில் கேரி கிரிஸ்டன், ஆஷிஷ் நெஹ்ரா, இங்கிலாந்து முன்னாள் வீரர் விக்ரம் சொலாங்கி ஆகியோரும் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now