
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் விளையாடின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே இன்னிங்ஸின் 2வது பந்திலேயே ஆட்டமிழந்தார். மும்பை வான்கடேவில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டிருந்ததால் முதல் 2 ஓவர்களுக்கு டி.ஆர்.எஸ் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப்பயன்படுத்தி எல்பிடபிள்யூவுக்கான பந்தை வீசினார் டேனியல் சாம்ஸ்.
டி.ஆர்.எஸ் எடுக்க முடியாது என்பதால் நடுவர் அவுட் கொடுத்தால் பேட்ஸ்மேன் வெளியேறித்தான் ஆகவேண்டும் என்ற வாய்ப்பை பயன்படுத்தி, 2ஆவது பந்திலேயே மிகக்கடுமையாக அப்பீல் செய்தனர் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள். நடுவரும் டெவான் கான்வேவுக்கு அவுட் கொடுத்துவிட்டார். ஆனால் அந்த பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே போயிருக்கும். டி.ஆர்.எஸ் இல்லாததால், அதிருப்தியுடன் நடையை கட்டினார் கான்வே.