
ஐபிஎல் 2022 மெகா ஏலத்துக்காக உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில் இந்த முறை மெகா அளவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
இதில் ஒரு சில தரமான வீரர்களை வாங்க 2 – 3 அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் இந்த சீசனுக்கான தங்களின் கேப்டனை இந்த ஏலத்தின் வாயிலாக தேர்வு செய்ய உள்ளதால் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் தரமான வீரர்களை கண்டறிந்து வாங்குவதற்காக அனைத்து ஐபிஎல் அணி நிர்வாகங்களும் பயிற்சியாளர்களும் மும்முரமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.