Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸை பந்தாடியது குஜராத் டைட்டன்ஸ்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 25, 2023 • 23:23 PM
IPL 2023: A comfortable victory for Gujarat Titans against Mumbai Indians!
IPL 2023: A comfortable victory for Gujarat Titans against Mumbai Indians! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததது. 

அதன்படி குஜராத் டைட்டன்ஸின் தொடக்க வீரர்களாக வழக்கம்போல் விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் விருத்திமான் சஹா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

Trending


அதன்பின் ஷுப்மனுடன் இணைந்த விஜய் சங்கர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் ஷுப்மன் கில் 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 19 ரன்களைச் சேர்த்திருந்த விஜய் சங்கரின் விக்கெட்டை பியூஷ் சாவ்லா கைப்பற்றினார். 

அவரைத் தொடர்ந்து 56 ரன்களை எடுத்திருந்த ஷுப்மன் கில்லும் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் - அபினவ் மனோகர் இணை சரமாரியாக சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசித்தள்ளினர். 

இதில் பவுண்டரிகளை விளாசித் தள்ளிய அபினவ் மனோகர் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திவேத்திய முதல் பந்திலேயே சிக்சர் அடித்து தனது இன்னிங்ஸைத் தொடங்கினார். 

அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் 21 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 46 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் திவேத்தியா 5 பந்துகளில் 3 சிக்சர்களை விளாசி 20 ரன்களை சேர்த்திருந்தார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 2 ரன்களிலும், இஷான் கிஷான் 13 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய திலக் வர்மாவும் 2 ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் - சூர்யகுமார் யாதவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய கேமரூன் க்ரீன் 33 ரன்கள் சேர்த்த நிலையில் நூர் அஹ்மத் பந்துவீச்சில் க்ளீன் போல்டாக, அடுத்து களமிறங்கிய டிம் டேவிட்டும் அதே ஓவரில் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 

மறுபக்கம் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியை தொடங்கிய நிலையில் 23 ரன்களில் நூர் அஹ்மத் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நேஹல் வதெரா அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 41 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.  அவரைத் தொடர்ந்து அர்ஜுன் டெண்டுல்கரும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான், மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement