
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதில் இன்று நடைபெற்று வரும் 21ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - கைல் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடி காட்டத்தொடங்கிய கைல் மேயர்ஸ் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 29 ரன்களில் ஆட்டமிழந்து, பெரிய இன்னிங்ஸை விளையாட தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய தீபக் ஹூடாவும் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ராகுலுடன் ஜோடி சேர்ந்த குர்னால் பாண்டியாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை பெரிதளவில் சோபிக்காமல் தவித்து வந்த கேஎல் ராகுல் இந்த இன்னிங்ஸில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து கம்பேக் கொடுத்தார்.