
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நேற்று கோலகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்த்து டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாட உள்ளது. லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வர்ம் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - கைல் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேஎல் ராகுல் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து வந்த தீபக் ஹூடவும் 17 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
ஆனால் தனது அறிமுக சீசனில் களமிறங்கிய கைல் மேயர்ஸ் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய மேயர்ஸ் 38 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 73 ரன்களைச் சேர்த்த நிலையில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.