
நடப்பு ஐபிஎல் சீசனின் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இதனால் இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
டேவிட் வார்னர் உடன் பிரிதிவி ஷா ஓப்பனிங் இறங்கினார். கடந்த மேட்சில் பூஜ்யத்தில் அவுட் ஆன பிரிதிவி இம்முறை 15 ரன்களுக்கு நடையைக் கட்டினார். மனிஷ் பாண்டேவும் கிடைத்த வாய்ப்பில் பெரிதாக சோபிக்கவில்லை. 26 ரன்கள் எடுத்திருந்த அவர், சாவ்லா பந்துவீச்சில் கேட்ச் ஆனார். யஷ் துல் 2 ரன்கள் ரோவ்மென் பவல் 4 ரன்கள், லலித் யாதவ் 2 ரன்கள் என மிடில் ஆர்டரும் கைகொடுக்க தவறினாலும், வார்னர் தனியாளாக போராடினார்.
இறுதி ஓவர்களில் அக்சர் படேல் அவருக்கு பக்கபலமாக அமைந்தார். வார்னர் நிதானத்தை கடைபிடிக்க, அக்சர் ஆக்ரோஷம் காட்டினார். இதனால், டெல்லி கேபிடல்ஸ் ரன்கள் விரைவாக உயர்ந்தது. 22 பந்துகளில் அரைசதம் கடத்த அக்சர், அடுத்த இரண்டு பந்துகளில் 54 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதற்கடுத்த இரண்டாவது பந்தே 51 ரன்கள் எடுத்திருந்த வார்னரும் விக்கெட்டை பறிகொடுத்தார்.