
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சாம் கரணை ரூ. ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம் கரண் படைத்துள்ளார் . இதற்கு முன்னர் கடந்த 2021ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ்மோரிஸை ராஜஸ்தான் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது.
சாம் கரண் கடந்த மாதம் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் 13 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். இதில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர், கைப்பற்றிய 3 விக்கெட்களும் அடங்கும். இதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. சாம் கரணை மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ ஆகிய அணிகளும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டியிருந்தன.
மேலும் 2019ஆம் ஆண்டு சாம் கரணை ரூ.7.20 கோடிக்கு வாங்கியிருந்த பஞ்சாப் அணி தற்போது அவருக்காக ரூ. ரூ.18.50 கோடியை செலவிட்டுள்ளது. இதற்கிடையில் சாம் கரண் 2020, 2021ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கேவுக்காக அவர் விளையாடி இருந்தார். இந்த ஆண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது