ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை வழியனுப்பி வைத்தது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 55ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின். இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக டெவான் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் இணை களமிறங்கினர். இதில் கான்வே 10 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 24 ரன்களை எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட்டும் அக்ஸரிடம் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய மொயீன் அலி வழக்கம் போல சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாட முன்ற அஜிங்கியா ரஹானே 21 ரன்களை எடுத்த நிலையில் லலித் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Trending
அடுத்து களமிறங்கிய் ஷிவம் தூபே தனது பங்கிற்கு 3 சிக்சர்களை பறக்கவிட்ட 25 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து 23 ரன்களில் அம்பத்தி ராயூடுவும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கினார் ரசிகர்களின் நாயகன் எம் எஸ் தோனி. அவர் களமிறங்கியது முதலே சோர்ந்து கிடந்த சிஎஸ்கே ரசிகர்கள் புது உற்சாகத்துடன் கரகோஷங்களை எழுப்பு ஆரவாரப்படுத்தினர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கலீல் அகமது வீசிய 19ஆவது ஓவரில் எம் எஸ் தோனி அடுத்தடுத்து 2 சிக்சர், ஒரு பவுண்டரியை விளாசி அசத்தினார்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 21 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து அதே ஓவரில் எம் எஸ் தோனியும் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 20 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் - பிலிப் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய தீபக் சஹார், வார்னரை டக் அவுட்டாக்கி வழியனுப்பி வைத்தார். ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பிலிப் சால்ட் 17 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தீபக் சஹாரிடமே விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய மனீஷ் பாண்டே டெல்லி கேப்பிட்டல்ஸின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷை ரன் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினர். இது ஆட்டத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து வந்த ரைலீ ரூஸோவ், மனீஷ் பாண்டேவுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இப்போட்டியில் 29 பந்துகளில் 27 ரன்களை எடுத்திருந்த மனீஷ் பாண்டேவின் விக்கெட்டை மதீஷா பதிரான தனது அபாரமான யார்க்கர் மூலம் வெளியேற்றினார். அதன்பின் அரைசதம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ரைலீ ரூஸோவ் 35 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அகஸர் படேலும் 21 ரன்களைச் சேர்த்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் மதீஷா பதிரான 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now