
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் திருவிழா நடக்கிறது. அதுவும், 1,426 நாட்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டெவான் கான்வே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அடித்து ஆட துவங்கினர். இதில், கொஞ்சம் கூடுதலாக நல்ல ஃபார்மில் இருக்கும் ருத்துராஜ் முதல் முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் தனது வான வேடிக்கையை காட்டி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். மார்க் வுட், கிருஷ்ணப்பா கவுதம், ஆவேஷ் கான், குர்ணல் பாண்டியா என்று யாரையும் விட்டு வைக்கவில்லை.
கிருஷ்ணப்பா கவுதம் ஓவரில் கெய்க்வாட் ஒரே ஓவரில் 3 சிக்ஸர் விளாசி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். பவர்பிளே என்று சொல்லப்படும் முதல் 6 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் குவித்தது. இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 25 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார்.