
16ஆவது சிசன் ஐபிஎல் தொடர் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியாக அமையவில்லை. இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி அந்த அணி இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், பிளே-ஆஃப் வாய்ப்பு சற்று கடினமான சூழலில் உள்ளது.
பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், பும்ரா, ரிச்சர்ட்சன் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதால், பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வராததால் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
அந்த 5 போட்டிகளிலும் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து, 9.50 சராசரியில் ரன்கள் கொடுத்து அணிக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக ஆர்ச்சர் விளையாடாத நிலையில், வரும் ஆஷில் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக அவரின் காயத்தின் தன்மையை கண்காணிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.