
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்களை மட்டுமே குவித்ததால் 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், “இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதே எங்களது அணியின் விருப்பமாக இருந்தது. ஏனெனில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று எங்களது ரசிகர்களும், இந்த ஜெய்ப்பூர் மைதானத்தில் முதல் வெற்றிக்காக நாங்களும் காத்திருந்ததால் இந்த வெற்றி எங்களுக்கு அவசியமான ஒன்று.