ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
16ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 34ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஹைதாராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி 3ஆவது பந்திலேயே பிலிப் சால்ட் விக்கெட்டாகி டெல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷை நடராஜன் எல்பிடபள்யூ முறையில் வெளியேற்றினார்.
கடந்த போட்டிகளில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 21 ரன்களில் கிளம்பினார். சர்ஃபராஸ்கானும், அமன் கானும் அவுட்டாக 7ஆவது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை எடுத்தார் வாஷிங்டன் சுந்தர். இதனால் 10 ஓவர் முடிவதற்குள் 5 விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி அணி 72 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
Trending
அக்சர் படேல், மணீஷ் பாண்டே நிதானமாக ஆடி விக்கெட் இழப்பை தடுக்க முயற்சித்தாலும் விதி அக்சர் படேலை விடவில்லை. புவனேஷ்குமார் பந்தில் போல்டாகி இந்த ஆட்டத்தில் அணியின் தனிநபர் ஸ்கோர்களில் அதிகபட்ச ஸ்கோரான 34 ரன்களைச் சேர்த்துவிட்டு கிளம்பினார். அதே ஸ்கோருடன் ரன்அவுட்டாகி மனீஷ் பாண்டேவும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அடுத்து வந்த ரிபால் படேல், அன்ரிச் நோர்ட்ஜே அடுத்தடுத்து ரன்அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் வாஷிங்கடன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், புவேனஷ்குமார் 2 விக்கெட்டுகளையும், நடராஜன் 1 விக்கட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஹாரி ப்ரூக் - மயங்க் அகர்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 7 ரன்களில் ஹாரி ப்ரூக் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ராகுல் திரிபாதி 15, அபிஷேக் சர்மா 5, கேப்டன் ஐடன் மார்க்ரம் 3 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் ஒரு முனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வத மயங்க் அகர்வல் 49 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் - ஹென்ரிச் கிளாசென் இணை ஜோடி சேர்ந்த பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஒரு கட்டத்தில் பவுண்டரிகளாக விளாசித்தள்ளிய கிளாசென் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டை இழந்தார். இதனால் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. டெல்லி அணி தரப்பில் கடைசி ஓவரை முகேஷ் குமார் வீச, வாஷிங்டன் சுந்தர் - மார்கோ ஜான்சன் களத்தில் இருந்தனர்.
ஆனால் கடைசி ஓவரை அபாரமாக வீசிய முகேஷ் குமார் அதில் வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக அகஸர் படேல், ஆன்ரிச் நோர்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியதுடன், நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now