ஐபிஎல் 2023: தாண்டவமாடிய சால்ட்; ஆர்சிபியை பந்தாடியது டெல்லி கேப்பிட்டல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
16வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. இதில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியும் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஃபாப் டு பிளெசிஸ், விராட் கோலி இணை 10 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி ரன்களைச் சேர்த்தனர். 11ஆவது ஓவரில் ஃபாப் டு பிளெசிஸ் 45 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த மேக்ஸ்வெல் அதே ஓவரில் டக் அவுட்டானார். 15 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த விராட் கோலியை 55 ரன்களுடன் முகேஷ் குமார் வெளியேற்ற 16 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 137 ரன்களைச் சேர்த்திருந்தது.
Trending
விராட் கோலி விட்டுச் சென்ற இடத்தை நிரப்பும் வகையில் மஹிபால் லோமரோரின் 3 சிக்ஸ்களுடனான அதிரடி ஆட்டம் ஆர்சிபி ரசிகர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. கூடவே தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு ஒரு சிக்ஸை விளாசி இருப்பை பதிவு செய்துவிட்டு 11 ரன்களுடன் கிளம்பினார். அவருக்கு அடுத்து வந்த அனுஜ் ராவத் சிக்சர் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 181 ரன்களைச் சேர்த்தது.
இதில் மஹிபால் லோமரோர் 54 ரன்களிலும், அனுஜ் ராவத் 8 ரன்களிலும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி தரப்பில் மிட்செல் மாஷ் 2 விக்கெட்டுகளையும், முகேஷ்குமார், கலீல் அஹமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் - பிலிப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 22 ரன்களைச் சேர்த்திருந்த டேவிட் வார்னர் ஹசில்வுட் பந்திவீச்சில் டூ பிளெசிஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் வந்து அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷும் தனது பங்கிற்கு 17 பந்துகளில் 26 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிலிப் சால்ட் 23 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், 45 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி 87 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அவரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எளிதாக இந்த இலக்கை எட்டியது.
இறுதியில் ரைலீ ரூஸோவ் சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரைலீ ரூஸோவ் ஒரு பவுண்டரி 3 சிக்சர்கள் என 35 ரன்களைச் சேர்த்தார்.
Win Big, Make Your Cricket Tales Now