ஐபிஎல் 2023 குவாலிஃபயர் 1: சிஎஸ்கேவை 172 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்து தற்போது பிளே ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் முதல் குவாலிஃபயர் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் எந்த மாற்றங்களும் இல்லை. அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் யாஷ் தயாளுக்குப் பதிலாக தர்ஷன் நல்கன்டே சேர்க்கப்பட்டார். இதையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் டெவான் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் இணை களமிறங்கினர்.
Trending
இதில் தர்ஷன் நல்கண்டே வீசிய முதல் ஓவரிலேயே ருதுராஜ் கெய்வாட் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அது நோபாலாக இருந்தது. அதன்பின் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
ஆனால் அதேசமயம் மறுமுனையில் டெவான் கான்வே பந்தை சரியாக மீட் செய்ய முடியாமல் தடுமாறினார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 60 ரன்களைச் சேர்த்திருந்த கெய்க்வாட் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அதிரடி வீரர் ஷிவம் தூபே ஒரு ரன்னில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய அஜிங்கியா ரஹானே அதிரடி காட்டத்தொடங்கினாலும் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு 17 ரன்களிலும், கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இறுதியில் 22 ரன்களை எடுத்திருந்திர ஜடேஜா, கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் க்ளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி, மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now