வெளியிலிருந்து யார் என்ன சொன்னாலும் நான் அதை பொருட்படுத்த மாட்டேன் - விராட் கோலி!
நான் கடந்த கால சாதனைகளை எப்போதும் பார்ப்பது இல்லை. நானே என்னை அழுத்ததில் தள்ளிக் கொள்வேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்றிரவு, நடைபெற்ற 65ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளஸ்சிஸ், பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹென்ரிச் கிளாசெனில் அபாரமான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில், 186 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து 187 ரன்களை இலக்காக கொண்டு ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக வீராட் கோலி-டூ பிளெசிஸ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 172 ரன் குவித்தனர். கோலி சதம் (63 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்து அவுட்டானார். டூ பிளஸ்சிஸ் 71 ரன்னில் வெளியேற, கடைசி ஓவரில் 4 பந்து மீதமிருக்க 187 ரன் இலக்கை எட்டி பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை பெங்களூரு தக்க வைத்துள்ளது.
Trending
இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சதங்களை அடித்த வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையையும் விராட் கோலி சமன்செய்து அசத்தினார். மேலும் அணியின் வெற்றிக்கு துருப்புச்சீட்டாக இருந்த விராட் கோலி இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தனது சதம் குறித்து பேசிய விராட் கோலி, “இது அபாரமான போட்டி. ஹைதராபாத் அணி நல்ல ஸ்கோர் தான் எடுத்திருந்தார்கள். இந்த இலக்கை விரட்டும் போது சிறப்பான தொடக்கம் கொடுக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால், விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுப்போம் என எதிர்பார்க்கவில்லை. அணிக்கு தேவைப்படும் சரியான நேரத்தில் எனது ஆட்டத்தை மீட்டெடுத்து வர வேண்டும் என நினைத்தேன். அது நடந்துள்ளது.
முதல் பந்து முதலே ஆட்டத்தில் என்னால் தாக்கம் ஏற்படுத்த முடிந்தது. நான் கடந்த கால சாதனைகளை எப்போதும் பார்ப்பது இல்லை. நானே என்னை அழுத்ததில் தள்ளிக் கொள்வேன். போட்டியில் தாக்கம் கொடுக்கும் வகையிலான எனது சில ஆட்டத்திற்கு நான் தனிப்பட்ட கிரெடிட் கொடுப்பதில்லை. அதனால் வெளியிலிருந்து யார் என்ன சொன்னாலும் நான் அதை பொருட்படுத்த மாட்டேன். அது அவர்கள் கருத்து. ஆட்டத்தின் அந்த சூழலில் நீங்கள் இருந்தால் மட்டுமே ஆட்டத்தை எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்பது தெரியும். அதை நான் நீண்ட காலமாக செய்து வருகிறேன்.
நான் அதிகம் பேன்சி ஷாட் ஆடுவதில்லை. ஆண்டில் 12 மாதங்களும் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஐபிஎல் முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் விளையாட வேண்டி உள்ளது. அதனால் நான் எனது டெக்னிக்கில் நிலையாக இருக்க விரும்புகிறன். டூ பிளெசிஸுடன் இணைந்து விளையாடும்போது டிவில்லியர்ஸ் உடன் விளையாடும் உணர்வை என்னால் பெற முடிகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்ட டூப்ளசி, அணியை வழிநடத்துவதும், டாப் ஆர்டரில் பேட்டிங்கில் அசத்துவதும் எங்களுக்கு சாதகம். இங்கு விளையாடுவது எங்கள் சொந்த மைதானத்தில் (பெங்களூரு) விளையாடுவது போல இருந்தது. ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு அமோகமாக இருந்தது. நான் விளையாடும் போது ரசிகர்கள் முகத்தில் தென்படும் புன்னகையை பார்க்கவே அதிகம் விரும்புகிறேன்” என கோலி தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now