
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக கேப்டன் ஷிகர் தவான் 57 ரன்களையும், ஷாருக்கான் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தலா 21 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக நிதீஷ் ராணா 51 ரன்களையும், ஆண்ட்ரே ரசல் 42 ரன்களையும் எடுத்து அசத்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆண்ட்ரே ரஸல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.