நிச்சயம் அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் - சஞ்சு சாம்சன்!
இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருக்கலாம் ஆனால் நிச்சயம் அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32ஆவது லீக் போட்டியானது நேற்று மதியம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது.
இப்போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக டூப்ளிசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவிக்க இறுதியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
Trending
இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், “இது போன்ற மைதானங்களில் விளையாடும் போது ஓவருக்கு 10, 12, 13 ரன்கள் என்பதெல்லாம் அடிக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதற்கு நாம் நல்ல முமென்ட்டத்தில் இருக்க வேண்டும். பொதுவாகவே ஹெட்மையர் இறுதி நேரத்தில் எங்களுக்காக மிகப்பெரிய ரன் சேசிங்கை முடித்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஆனால் இன்றைய போட்டியில் அவரால் அதனை செய்ய முடியாமல் போனது. மைதானத்தின் தன்மை சற்று மாறி இருந்ததாலேயே சில பந்துகளை எங்களால் கனெக்ட் செய்ய முடியவில்லை. இதுபோன்ற போட்டிகளில் அஸ்வினின் அனுபவம் எங்களுக்கு பயன் தரும் என்பதாலும் ஏற்கனவே இது போன்ற அழுத்தமான போட்டிகளில் அவர் களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடியதாலயே ஹோல்டருக்கு முன்னதாக அவரை நாங்கள் களமிறக்கினோம்.
அதேபோன்று ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகாலம் அனுபவம் உடைய அவரது திறன் தற்போது பேட்டிங்கிலும் மிருகேறியுள்ளது. அதன் காரணமாகவே அவர் சமீபத்திய போட்டிகளிலும் அசத்தி வருகிறார். இதுபோன்ற போட்டிகளில் அனைத்து துறைகளிலும் நாம் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருக்கலாம் ஆனால் நிச்சயம் அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now