
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 66ஆவது லீக் போட்டியானது நேற்று தர்மசாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது. பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் தற்போது அவர்கள் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான போட்டி மீண்டும் நீடித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், “இந்த போட்டி இன்னும் விரைவிலேயே முடிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஏனெனில் ஹெட்மையர் விளையாடிக் கொண்டிருந்தபோது நிச்சயம் அவர் 19 ஓவர்களுக்குள் போட்டியை முடித்துக் கொடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் இறுதி கட்டத்தில் அவர் ஆட்டம் இழந்ததும் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. நாங்கள் ஒரு அணியாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தரமான அணி என்பதை காண்பித்து இருந்தாலும் புள்ளி பட்டியலில் நாங்கள் இருக்கும் இடம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.