
மும்பை அணியின் பந்துவீச்சு துறையில் முன்னணி பந்துவீச்சாளராக பார்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர், கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்த சீசன் காயம் காரணமாக முழுமையாக விளையாடவில்லை. இருப்பினும் இளம் வயதாக இருப்பதால் எதிர்காலத்திற்கு அவசியமான வீரர் என்கிற கோணத்தில் மும்பை அணி நிர்வாகம் எடுத்தது. மேலும் கடந்த ஜனவரி மாதம் காயத்தில் இருந்து குணமடைந்து வந்த ஆர்ச்சர், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.
இந்த வருட ஐபிஎல் சீசனில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் உடல்நிலையில் சிறுசிறு அசவுகரியங்கள் ஏற்பட்டதால் விளையாட வைக்கப்படவில்லை. அதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை விட பந்துவீச்சில் படுமோசமாக செயல்பட்டு வருவதை பார்க்க முடிந்தது. குறிப்பாக டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து தோல்விக்கும் வித்திடுகிறது.எப்போது ஆர்ச்சர் வருவார்? என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், தற்போது ஆர்ச்சர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதில், “ஜோப்ரா ஆர்ச்சரின் கையில் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பலனளிக்கவில்லை என்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதனால் விரைவில் பெல்ஜியம் செல்கிறார்” என்ற தகவல் வெளியாகியுள்ளது.