
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஷ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக இன்னிங்ஸைத் தொடங்கிய ஜெய்ஷ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பட்லர் - படிக்கல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தேவ்தத் படிக்கல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 38 ரன்களில் ரவிந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் அதே ஓவரில் ரன்கள் ஏதுமின்றி க்ளீன் போல்டாகினார்.