
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் கொல்கத்தா அணியின் தொடக்க ஆடக்காரர்களாக களமிறங்கினர்.
ஒருபுறம் ரஹ்மானுல்லா நிலைத்து நிற்க மறுபுறமிருந்த வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களில் போல்டானார். அவருக்கு அடுத்து வந்த மந்தீப் சிங்கும் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தார். நிதிஷ் ராணாவும் 1 ரன்களில் கிளம்ப 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களைச் சேர்த்திருந்தது கொல்கத்தா.
இதையடுத்து 44 பந்துகளில் 57 ரன்களை குவித்த ரஹ்மானுல்லாவை கரண் சர்மா அவுட்டாக்க, அடுத்து வந்த ரஸல் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியின் திரும்பினார். பேட்ஸ்மேன்களில் சொதப்பலால் தட்டு தடுமாறி 89 ரன்களுக்கே 5 விக்கெட்டை பறிகொடுத்தது கேகேஆர் அணி. அதுவரை அவுட்டான வீரர்களுக்கும் சேர்த்து அடுத்து வந்த ஷர்துல் தாக்கூரும் ரின்கு சிங்கும் இணைந்து 50 பந்துகளில் 103 ரன்கள் பாட்னர்ஷிப்பை அமைத்து அதிரடி காட்டினர்.