
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸூம், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், அன்மோல்பிரீத் சிங்கும் களமிறங்கினர்.
இதில், மயங்க் அகர்வால் 8 ரன்களில் கிளம்ப, ராகுல் திரிபாதி களத்துக்கு வந்து சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அன்மோல்பிரீத் சிங் 31 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் வந்த முதல் பந்திலேயே போல்டாக, அவருக்கு பின் வந்த ஹாரி ப்ரூக் 3 ரன்களில் முடித்துக்கொண்டார்.
நிலைத்து ஆடிய ராகுல் திரிபாதியும் 34 ரன்களில் பெவிலியன் திரும்ப அணியின் ஸ்கோரில் பெரிய அளவில் எந்த முன்னேறமுமின்றி 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 105 ரன்களை சேர்த்து பரிதாபமாக விளையாடியது.வாஷிங்டன் சுந்தர் 16 ரன்களில் விக்கெட்டாகி பெவிலியன் சென்றடைய, ஆதில் ரஷித் 4 ரன்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த உம்ரான் மாலிக் ரன் எதுவும் எடுக்காமல் அவர்களுடன் ஐக்கியமானார்.