
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மீதமுள்ள மூன்று இடங்களைப் பிடிக்க மற்ற அணிகள் தீவிரமாக மல்லுக்கட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்று வரும் 63ஆவது லீக் ஆட்டத்தில் குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் - தீபக் ஹூடா இணை களமிறங்கினர். இதில் தீபக் ஹூடா 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே இளம் வீரர் மான்கட்டும் ஆட்டமிழந்தார். அதன்பின் பியூஷ் சாவ்லா வீசிய முதல் பந்திலேயே குயின்டன் டி காக் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் குர்னால் பாண்டியா - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதுடன், மேற்கொண்டு விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் பார்த்துக்கொண்டனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் மும்பை அணி வீரர்கள் என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினர்.