
ஐபிஎல் 16ஆவது சீசன் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்று, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது. இன்று பிற்பகல் நடந்த போட்டியில் கேகேஆரை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் டெல்லி கேப்பிட்டள்ஸும் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுலும் கைல் மேயர்ஸும் இறங்கினர்.
இதில் கேஎல் ராகுல் 12 பந்தில் 8 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய தீபக் ஹூடாவும் 18 பந்தில் பவுண்டரியே அடிக்காமல் வெறும் 17 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் தொடக்கம் முதலே அடித்து ஆடி சிக்ஸர்களாக விளாசி சிக்ஸர் மழை பொழிந்த கைல் மேயர்ஸ் அரைசதம் அடித்தார். 38 பந்தில் 7 சிக்ஸர்களை விளாசிய கைல் மேயர்ஸ் 72 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் தான் லக்னோ அணியின் ஸ்கோர் உயர்ந்தது.