ஐபிஎல் 2023: சூர்யகுமார் விளாசல்; ஆர்சிபியை ஊதித்தள்ளியது மும்பை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. இதில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணிந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை களமிறங்கினர். இதில் விராட் கோலி ஒரு ரன்னிலும், அனுஜ் ராவத் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து பெஹ்ரன்டோர்ஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
Trending
அடுத்து வந்த ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் இணை மும்பை பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர். 12 ஓவர் வரை இந்த இணையை பிரிக்க முடியாமல் மும்பை திக்குமுக்காடியது. ஒருவழியாக போராடி 4 சிக்சர்களுடன் 33 பந்துகளில் 68 ரன்களை குவித்த மேக்வெல்லை ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் அவுட்டாக்கினார். அடுத்து மஹிபால் லோமரோர் 1 ரன்னில் போல்டாக, டு பிளெசிஸூம் 65 ரன்களுடன் கிளம்பினார்.
17 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை சேர்த்திருந்த நிலையில், தினேஷ் கார்த்திக்கும், கேதர் ஜாதவ்வும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தினேஷ் கார்த்திக் சிக்சர் விளாசி நம்பிக்கையூட்டினாலும் 30 ரன்களில் அவசரப்பட்டு கிளம்பினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 199 ரன்களை குவித்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷான் 21 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 42 ரன்க்ளில் ஹசரங்கா ஆட்டமிழக்க, அதே ஓவரில் வெறும் 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ரோஹித் சர்மாவும் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - நேஹல் வதேரா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்ததுடன், 7 பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 83 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
மேலும் மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 139 ரன்களையும் இந்த இணைச் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய டிம் டேவிட்டும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். ஆனாலும் மறுமுனையில் நேஹல் வதேரா சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்ததுடன், தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நேஹல் வதேரா 34 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 52 ரன்களைச் சேர்த்திருந்தார்.
Win Big, Make Your Cricket Tales Now