ஐபிஎல் 2023: டிம் டேவிட் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 42ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டி ஐபிஎல் தொடரின் 1000ஆவது போட்டியாக அமைந்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
வழக்கம் போலவே அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் என இருவரும் முதல் விக்கெட்டிற்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜெய்ஸ்வாலுக்கு துணையாக நின்ற பட்லர், 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் பேட் செய்ய வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், படிக்கல், ஹோல்டர், ஹெட்மயர், துருவ் ஜுரல் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
Trending
இருந்தும் மறுமுனையில் ஜெய்ஸ்வால் அடங்கமறுத்தார். எத்தனை விக்கெட்டுகள் சரிந்தாலும் நான் எனது பாணி ஆட்டத்தை ஆடுவேன் என சொல்வது போல இருந்தது அவரது இன்னிங்ஸ். அதன் பலனாக ஐபிஎல் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் ஜெய்ஸ்வால். இந்த சதம் அவரது சொந்த ஊரான மும்பை மண்ணில் பதிவு செய்தது கூடுதல் சிறப்பு. 62 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். இதில் 16 பவுண்டர்கள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும்.
கடைசி ஓவரின் 4ஆவது பந்தில் அவரது விக்கெட்டை அர்ஷத் கான் கைப்பற்றினார். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி. மும்பை அணி தரப்பில் அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இஷான் கிஷானுடன் இணைந்த கேமரூன் க்ரீன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
பின் 28 ரன்களை எடுத்திருந்த இஷான் கிஷான் விக்கெட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்ற, மறுமுனையில் அரைசதம் நோக்கி நர்ந்துகொண்டிருந்த கேமரூன் க்ரீன் 44 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி 24 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 55 ரன்களைச் சேர்த்த நிலையில் சந்தீப் சர்மாவின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த திலக் வர்மா - டிம் டேவிட் இணையும் அதிரடியில் மிரட்ட, மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் கடைசி ஓவரை வீச, அதனை எதிர்கொண்ட டிம் டேவிட் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 5 சிக்சர், 2 பவுண்டரி என 45 ரன்களையும், திலக் வர்மா 29 ரன்களையும் சேர்த்தனர்.
Win Big, Make Your Cricket Tales Now