
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. குஜராத் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது பெரும்பாலும் உறுதியாகிவிட்ட நிலையில், மற்ற 3 அணிகள் எது என்பது இன்னும் இழுபறியாகவே உள்ளது. அந்த இடங்களுக்காக மீதமுள்ள 9 அணிகளுமே கடுமையாக போராடி வருகின்றன. முன்பு எப்போது இல்லாத அளவிற்கு அணிகளின் ரன்-ரேட்டும் நடப்பு டொடரில் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் தான் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.
நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று களமிறங்குகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்பதால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.