
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அந்த அணி 151 ரன்களை மட்டுமே எடுத்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மேலும் இப்போட்டியின் ஆடடநயாகனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆட்டம் முடிந்து செல்கையில் இரு அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் கைகுலுக்கிக் கொள்ளும் சம்பிரதாய நிகழ்வில் விராட் கோலி ரிக்கி பாண்டிங் உடன் கைகுலுக்கி இருவரும் ஏதோ பேசிக்கொள்ளுகையில், ரிக்கி பாண்டிங் பின்னால் வந்த கங்குலி விராட் கோலி உடன் கைகுலுக்க காத்திருக்காமல் இவர்களை உடனே தாண்டி சென்று விட்டார்.
மேலும் விராட் கோலி ஃபீல்டிங் செய்கையில் கேட்ச் பிடித்து கங்குலியை நோக்கி ஆக்ரோஷமாக பார்த்தது போல் ஒரு புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்ள கங்குலி பின்னிருந்து அழுத்தம் கொடுத்தவராக இருந்தார் என்ற கருத்து பரவலாக இருக்கின்றது.