
ஐபிஎல் 16ஆவது சீசனின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் தகுதிப் பெற்றது.
இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் விளையாடிய குஜராத் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் இளம் வீரர் சுப்மன் கில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் ஆடுகளத்தை படித்து மெதுவாக துவங்கிய அவர் போகப்போக ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தி அரை சதம் அடித்தார். இதற்குப் பிறகு அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது.
இதற்கு அடுத்து பத்து ஓவர்கள் தாண்டி 12 வது ஓவரில் ஆகாஷ் மத்வால் வர சுப்மன் கில் தனது அதிரடியில் இறங்கினார். முதல் பந்து, இரண்டாவது பந்து மற்றும் ஐந்தாவது பந்தில் அபாரமான மூன்று சிக்ஸ்ர்களை பறக்க விட்டார். இங்கிருந்துதான் ஆட்டம் அப்படியே குஜராத் பக்கம் வர ஆரம்பித்தது. பேய் ஆட்டம் ஆடிய சுப்மன் கில் 60 பந்தில் ஏழு பவுண்டரி, பத்து சிக்ஸர் உடன் 129 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் மொத்தம் பதினாறு போட்டிகளில் 851 ரன்கள் எடுத்திருக்கிறார்.