
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து ராஜஸ்தான் அணியின் பந்துகளை நாலாப்புறமும் சிதறடிக்க 9 ஓவர் வரை எந்த விக்கெட்டும் இல்லாமல் 86 ரன்கள் சேர்க்கப்பட்டது.
34 பந்துகளில் 60 ரன்களைச் சேர்த்து ராஜஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பிரப்சிம்ரன் சிங்கை ஜேசன் ஹோல்டர் அவுட்டாக்கினார். ராஜஸ்தானுக்கு இது முக்கியமான விக்கெட். அடுத்து வந்த பானுகா ராஜபக்சா காயம் காரணமாக வந்த வேகத்தில் வெளியேறினார். ஒருபுறம் ஷிகர் தவான் நிலைத்து நின்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் ஜிதேஷ் ஷர்மா 27 ரன்களுடனும், ஷிக்கந்தர் ராஜா 1 ரன்னிலும் நடையைக்கட்டினர்.
இதனால் 18 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. 56 பந்துகளில் 86 ரன் என்ற ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும், சாஹல், அஸ்வின் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.