ஐபிஎல் 2023: சிஎஸ்கேவை கடைசி பந்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 41ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சிஎஸ்கேவின் இன்னிங்ஸை தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முதல் 9 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொண்ட இந்த காம்போவை சிக்கந்தர் ராசா பிரிந்தார். அதன்படி 37 ரன்களுடன் ருதுராஜ் வெளியேறினார். டெவான் கான்வே நிலைத்து நின்று ஆட ஷிவம் தூபே 28 ரன்களில் நடையைக்கட்டினார். மொயின் அலி 10 ரன்களில் விக்கெட்டாக 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 169 சேர்த்திருந்தது. ஜடேஜா 12 ரன்களில் விக்கெட்டாக வந்து சேர்ந்தார் தோனி. 4 பந்துகளில் 2 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.
Trending
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 200 ரன்களை குவித்துள்ளது. தோனி 13 ரன்களுடனும், டெவான் கான்வே 92 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங், சாம்கரன், ராகுல் சாஹர், சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான் - பிரப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்கம் கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதன்பின் 28 ரன்களைச் சேர்த்திருந்த ஷிகர் தவான் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரப்சிம்ரன் சிங் 42 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த அதர்வா டைட் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் - சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 4 சிக்சர் ஒரு பவுண்டரி என 40 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 29 ரன்களைச் சேர்த்திருந்த சாம் கரணும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா தானது பங்கிற்கு 21 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
சிஎஸ்கே தரப்பில் கடைசி ஓவரை பதிரானா வீச, அதனை எதிர்கொண்ட சிக்கந்தர் ரசா கடைசி பந்தில் 3 ரன்களை ஓடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now