ஐபிஎல் 2023: ரஷித் கான் போராட்டம் வீண்; குஜராத்தை வீழ்த்தியது மும்பை!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா முந்தைய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் 2 சிக்ஸர்களை விளாசி அடித்து ஆடினார்.
இந்த போட்டியில் அரைசதமாவது அடிப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் 29 ரன்களைச் சேர்த்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் அவுட்டான அதே ஓவரில் இஷான் கிஷனும் 31 ரன்களில் ரஷித் கானிடமே விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த நேஹல் வதேராவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
Trending
அதன்பின் சூர்யகுமார் யாதவ் - விஷ்ணு வினோத் பார்ட்னர்ஷிப் அமைக்க 15 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 151 ரன்களைச் சேர்த்திருந்தது. விஷ்ணு வினோத் 30 ரன்கள், டிம் டேவிட் 5 ரன்களிலும் கிளம்ப சூர்யகுமார் யாதவின் அதிரடியால் குஜராத் திக்குமுக்காடி போனது. 6 சிக்சர்கள் விளாசி தனது முதல் சதத்தை பதிவு செய்தார் சூர்யகுமார் யாதவ்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை 218 ரன்களைச் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 103 ரன்களுடன் கடைசிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். குஜராத் அணி தரப்பில் ரஷீத்கான் 4 விக்கெட்டுகளையும், மோஹித் ஷர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் விருத்திமான் சஹா 2 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ரன்களிலும், ஷுப்மன் கில் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். ஆனால் 6ஆவது ஓவரை வீச வந்த பியூஷ் சாவ்லா தனது முதல் பந்திலேயே 29 ரன்களை எடுத்திருந்த விஜய் சங்கரை க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து களமிறங்கிய அபினோவ் மனோகர் 2 ரன்கலிலும், ராகுல் திவேத்தியா 14 ரன்களில் ஆட்டமிழந்தர்.
அதேசமயம் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரஷித் கான் யாரும் எதிர்பார்க்காதவகையில் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இப்போட்டியின் இறுதிவரை களத்தில் இருந்த ரஷித் கான் 32 பந்துகளில் 10 சிக்சர்கள், 3 பவுண்டரி என 79 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now