
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் பல்வேறு திருப்புமுனைகளை கொண்டதாக அமைந்ததோடு, மற்ற ஐபிஎல் தொடர்களை போல அல்லாமல் கடைசி வாரம் வரை நெருக்கமாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை குஜராத் அணி மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. மற்ற 3 இடங்களுக்கும் எந்த அணி தகுதி பெறும் என்பதில் இன்றளவும் குழப்பம் நிலவி வருகிறது.
இந்த ஐபிஎல் தொடர் பல இளம் வீரர்களுக்கும் அவர்களது எதிர்காலத்தின் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க விதமாக இருக்கும் இரண்டு வீரர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக இறங்கி கலக்கிவரும் ஜெய்ஸ்வால் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பினிஷிங் செய்து வரும் ரிங்கு சிங் ஆகிய இருவரும் ஆகும்.
ஜெய்ஸ்வால், இதுவரை 4 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 13 போட்டிகளில் 575 ரன்கள் குவித்து 47.30 சராசரியாக வைத்திருக்கிறார். அத்துடன் 166 ஸ்ட்ரைக் ரேட் வைத்து அதிரடியாகவும் விளையாடியிருக்கிறார். தடுமாறி வந்த கொல்கத்தா அணிக்கு மிகமுக்கியமான போட்டிகளில் ரிங்கு சிங் பினிஷிங் செய்து கொடுத்திருக்கிறார். இவர் 13 போட்டிகளில் 407 ரன்கள் குவித்து நான்கு அரைசதங்களும் அடித்திருக்கிறார். அனைத்து அரைசதங்களும் மிக முக்கியமான கட்டத்தில் வந்தவை.