
ஐபிஎல் தொடரின் 13ஆவது லீக் ஆட்டத்தில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் களமிறங்காத நிலையில் ரஷீத் கான் அணிக்கு தலைமை தாங்கினார்.
அதன்படி, சஹா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சுமாரான துவக்கம் கொடுத்தனர். குஜராத்தின் டாப் ஆர்டரை சுனில் நரைன் சரித்தார். 17 ரன்கள் எடுத்திருந்த சஹாவை முதல் விக்கெட்டாக ஆட்டத்தின் ஐந்தாவது ஓரிலேயே வீழ்த்தினார். இதன்பின் ஷுப்மன் கில் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன். இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
வழக்கத்துக்கு மாறாக பொறுமையாக விளையாடிய கில் ஒருகட்டத்தில் பொறுமை இழந்து நரைன் பந்தை தூக்கி அடிக்க முயல அது நேராக உமேஷ் யாதவ் கைகளில் தஞ்சம் ஆனது. 39 ரன்களுக்கு அவர் அவுட் ஆக, அதிரடியாக தொடங்கிய அபிநவ் மனோகரை அதே அதிரடி பாணியில் போல்டாக்கி 14 ரன்களுக்கு நடையைக்கட்ட வைத்தார் சுயாஷ் சர்மா. சிறப்பாக விளையாடிய சாய் சுதர்ஷன் 53 ரன்கள் கடந்திருந்த நிலையில் நரைன் பந்துவீச்சில் வீழ்ந்தார். எனினும் மற்றுமொரு முனையில் இருந்த மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் அவர் விட்டுச்சென்ற அதிரடியை தொடர்ந்தார்.