
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் நடப்பு சீசனில் மும்பை அணி தொடர்ந்து இரண்டு முறை தோல்வியை அடைந்து இருக்கிறது.சொந்த மண்ணில் வெற்றி பெறலாம் என மும்பை இந்தியன்ஸ் அணி நினைத்த நிலையில் அதற்கு தோனி படை முட்டுக்கட்டை போட்டு உள்ளது.
இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “நாங்கள் இன்றைய ஆட்டத்தில் நல்ல தொடக்கத்தை அளித்தோம். ஆனால் அதன் பிறகு எங்களுடைய வீரர்கள் எங்களுடைய தொடக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. வான்கடே மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக தான் இன்றைய ஆட்டத்திலும் இருந்தது.
நாங்கள் ஒரு 30, 40 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். எங்களுடைய இன்னிங்ஸின் நடு ஓவர்களில் நாங்கள் அதிரடியாக விளையாடி இருக்க வேண்டும். இதற்காக நான் சிஎஸ்கே அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை பாராட்டுகிறேன். அவர்கள் எங்களுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தார்கள். எங்கள் அணி வீரர்கள் தைரியமாக விளையாட வேண்டும்.