ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடியது ஆர்சிபி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆர்சிபியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் இணை அணிக்கு அத்தனை சிறப்பாக அமையவில்லை. 4-ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் வீசிய பந்தில் 22 ரன்களுடன் அவுட்டாகி டு பிளெசிஸ் ஏமாற்றமளித்தார். கேப்டன் கோலியும் 50 ரன்களில் கிளம்பினார். மஹிபால் லோமரோர் 2 சிக்சர்களை 26 விளாசினாலும் 26 ரன்களுடன் அவுட்டானார்.
Trending
ஹர்ஷல் படேல் 6 ரன்களுடன் வந்த வேகத்தில் நடையைக்கட்ட, க்ளென் மேக்ஸ்வெல் 3 சிக்சர்களை விளாசி நம்பிக்கையளித்த போதிலும் 24 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த தினேஷ்கார்த்திக் டக் அவுட்டானார். வீரர்கள் சோபிக்காததால் 15 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த ஆர்சிபி 134 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
அனுஞ் ராவத் 15 ரன்களையும், ஷாபாஸ் அகமது 20 ரன்களையும் சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 174 ரன்களைச் சேர்த்தது. டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், லலித் யாதவ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி வீரர்கள் பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், யாஷ் துல் ஆகியோர் அடுத்தடுது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டி ஏமாற்றளித்தனர். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான டேவிட் வார்னரும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து வந்த மனீஷ் பாண்டே ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய அபிஷேக் பொரெல், அக்ஸர் படேலும் கணிசமான ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த மனீஷ் பாண்டேவும் 50 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆர்சிபி தரப்பில் அறிமுக வீரர் விஜயகுமார் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now