
ஐபிஎல் தொடரின் 16ஆவது விறுவிறுப்பு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 7 ரன்களுக்கும், மிட்செல் மார்ஷ் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். நிதானமாக நின்று விளையாடிய டேவிட் வார்னரும் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரைலீ ரூசோ ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார்.
களத்தில் பொறுப்புடன் நின்று விளையாடிய சர்ஃபராஸ் கான் நிதானமாக விளையாடி 34 பந்தில் 30 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரஷீத் கான் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் அபிஷேக் போரெல் 11 பந்தில் 20 ரன்கள் அடித்து அவரும் ரஷீத் கான் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த அக்ஸர் படேல் நின்று ஆடி டெத் ஓவரில் அடித்து ஆடி 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் அடித்து இன்னிங்ஸை முடித்து கொடுத்தார்.