
கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் சஞ்சு சாம்சன். பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் மற்றும் கேப்டன் ஷிக்கர் தவான் இருவரும் ஓபனிங் செய்து வெளுத்து வாங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 91 ரன்கள் சேர்த்தது.
பிரப்சிம்ரன் 60 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர் 7 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த கீப்பர் ஜித்தேஷ் சர்மா 27 ரன்கள் அடித்து அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக விளையாடி இதுவரை நிலைத்து நின்ற ஷிக்கர் தவான் 3 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் உட்பட 56 பந்துகளில் 86 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் அடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
இதையடுத்து, 198 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஷ்வி ஜெய்ஸ்வால்(11), அஸ்வின்(0) மற்றும் ஜோஸ் பட்லர்(19) ஆகிய மூவரும் சொற்பரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை சரியவிடாமல் 25 பந்துகளில் 42 ரன்கள் அடித்திருந்தபோது பஞ்சாப் பவுலர் நாதன் எல்லிஸ் பந்தில் தவறான நேரத்தில் அவுட்டானார். படிக்கல் 21(26) ரன்கள், ரியான் பராக் 20(12) ரன்கள் ஆட்டமிழந்தனர்.