
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர்.
இதில் விருத்திமான் சஹா 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் டிரெண்ட் போல்ட்டின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சய் சுதர்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகினார். அதனைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லுடன் இணைந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதன்பின் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 28 ரன்களில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து டேவிட் மில்லர் - அபினவ் மனோகர் இணை ஜோடி சேர்ந்தனர். இருவரும் தொடர்ந்து பவுண்டரிகளை விரட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 3 சிக்சர்களை விளாசி 27 ரன்களைச் சேர்த்திருந்த அபினவ் மனோகர் விக்கெட்டை இழந்தார்.