ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை 162 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 7ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் - பிரித்வி ஷா இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் மிட்செல் மார்ஷும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.
Trending
இதையடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த சர்ஃப்ராஸ் கான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். பின் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரைலீ ரூஸோவ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் 30 ரன்களில் சர்ஃபராஸ் கானும், 20 ரன்களில் அபிஷேக் பரோலும் ஆடமிழக்க, அடுத்து வந்த அக்ஸர் படேல் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 36 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெல்லி அணி பேட்டர்களை கட்டுப்படுத்தினர்.
Win Big, Make Your Cricket Tales Now