டக் அவுட்டிற்கு பறந்த தண்ணீர் பாட்டில்; லக்னோ - ஹைதராபாத் ஆட்டத்தில் பரபரப்பு!
ஹைதராபாத் - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மூன்றாம் நடுவரின் முடிவால் கோபமடைந்த ரசிகர்கள் லக்னோ அணி டக்வுட்டில் தண்ணீர் பாட்டிலை வீசிய சம்பவம் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் 58ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் புள்ளி பட்டியலில் 9ஆவது இடத்தில் திண்டாடும் ஹைதராபாத் எஞ்சிய பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள 5ஆவது இடத்தில் இருக்கும் லக்னோவை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
அந்த நிலையில் டாஸ் வென்று ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கி அந்த அணிக்கு அபிஷேக் ஷர்மா ஆரம்பத்திலேயே 7 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாட முயற்சித்து 4 பவுண்டரியுடன் 20 (13) ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் 7 பவுண்டரியுடன் சிறப்பாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் அன்மோல்ப்ரீத் சிங்கும் 36 (27) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.
Trending
அந்த நிலைமையில் களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் அதிரடியாக விளையாட முயற்சித்து 2 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்த போது அவுட்டாக்கிய க்ருனால் பாண்டியா அடுத்த பந்திலேயே அதிரடி வீரர் கிளன் பிலிப்ஸை டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதை தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த 5வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹென்றிச் க்ளாஸென் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 47 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.
அவருடன் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த கடந்த போட்டியின் நாயகன் அப்துல் சமத் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் ஹைதராபாத் 182/6 ரன்கள் எடுத்தது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தார். முன்னதாக இந்த போட்டியில் ஆவேஷ் கான் வீசிய 19ஆவது ஓவரின் 3ஆவது பந்தை அப்துல் சமத் எதிர்கொண்ட நிலையில் அது இடுப்புக்கு மேலே வந்தது.
அதனால் களத்தில் இருந்த நடுவர் வழக்கம் போல நோ பால் கொடுத்த போதிலும் குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிஆர்எஸ் ரிவ்யூ எடுத்தது. அதை 3ஆவது நடுவர் சோதித்த போது இடுப்புக்கு மேலே பந்து வந்த நிலையில் பேட்ஸ்மேன் சற்று குனிந்தவாறு அந்த தருணத்தில் இருந்தார். அதன் காரணமாக நோ-பால் கொடுக்க முடியாது என்ற வகையில் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த முடிவை 3ஆவது நடுவர் அதிரடியாக மாற்றி சரியான பந்து என்று அறிவித்தார்.
LSG Games Can't go ahead without controversies
— CRICKETNMORE (@cricketnmore) May 13, 2023
(Pic - Jio Cinema/IPL)#IPL2023 #SRHvLSG #ViratKohli #GautamGmabhir pic.twitter.com/pL4K5KlRf9
அதனால் ஏமாற்றமடைந்த ஹைதராபாத் வீரர்கள் களத்தில் இருந்த நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் தங்களது அணிக்கு நடந்த அநியாயத்தை தாங்கிக் கொள்ள முடியாத ஹைதராபாத் ரசிகர்கள் அடுத்த பந்து வீசி முடித்ததும் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலைக் கொண்டு மைதானத்தின் ஓரத்தில் பெவிலியினில் அமர்ந்திருந்த லக்னோ அணியினர் மீது வீசினர். அதனால் கோபமடைந்த பயிற்சியாளர் ஆன்டி ஃபிளவர் உள்ளிட்ட லக்னோ அணியினர் கோபமடைந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது.
அப்போது எங்களை யாராலும் அடக்க முடியாது என்ற வகையில் கொந்தளித்த ரசிகர்கள் “விராட் கோலி விராட் கோலி” என்று கூச்சலிட்டு கௌதம் கம்பீர் தலைமையிலான லக்னோ அணிக்கு நேரடியாக பதிலடி கொடுத்தனர். அப்போது உடனடியாக லக்னோ அணியின் நிர்வாகத்திடம் சென்ற நடுவர்கள் அமைதிப்படுத்தியதால் ரசிகர்களும் அமைதியானார்கள்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மீண்டும் பவுன்ஸ் ஆகி வந்த பந்தை களத்தில் இருந்த நடுவர் ஒய்ட் கொடுக்காதது ஹைதராபாத் வீரர்களையும் ரசிகர்களையும் ஏமாற்றமடைய வைத்தது. குறிப்பாக அப்பட்டமான நோபால் மற்றும் ஒயிட் என்று தெரிந்தும் அதை வழங்க முடியாது உங்களால் முடிந்ததை பாருங்கள் என்ற வகையில் நடுவர்கள் நடந்து கொண்டது இதர ரசிகர்களையும் கடுப்பாக வைத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now